குற்றாலம் அருவியில் எண்ணெய், சீயக்காய் மற்றும் சோப்பு பயன்படுத்தி குளிக்க ஐகோர்ட் தடை விதித்துள்ளது. குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், அடிப்படை வசதிகள் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் குற்றாலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் குறித்து 37 உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், குற்றாலம் அருவில் பிளாஸ்டிக் பொருட்கள், சோப்பு, சீயக்காய் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மகளிர் உடை மற்றும் அறை, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்ய வேண்டும், கண்காணிப்பு கேமரா, அதிக வெளிச்சம் உள்ள விளக்கு பொருத்த வேண்டும் உள்ளிட்ட அம்சங்களும் தீர்ப்பில் இடம்பெற்றுள்ளன.

திறந்தவெளி, சாலை, கார்களில், மதுபானம் அருந்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மதுபானம் குடிப்பவர்களை வீடியோ எடுக்க வேண்டும் என்றும் அருவி பகுதியில் மது விற்பனையை தடை செய்யவும் என்றும் குற்றாலம் பகுதியை, முறையாக பராமரிக்க வேண்டும், அருவி பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள், கோவில், பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.