குற்றாலம் சாரல் திருவிழா ஜூலை 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2ம் தேதி வரை தினமும் பல்வேறு போட்டிகளுடன், கலை நிகழ்ச்சிகளுடன் ஒரு வார காலம் சிறப்பாக நடைபெற்றது.

 

லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளின் சொர்க்கப்புரியாக திகழும் குற்றாலம் மூலிகைகள் ததும்பும் மெயினருவி, ஐந்தருவி,பழையக்குற்றாலம்,புலியருவி என ஆர்பரிக்கும் அருவிகளில் நீராடாவும்,குற்றாலத்தின் இயற்கையின் அழகை கண்கொள்ளா ரசிக்கவும் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த சாரல் விழா நடத்தப்படுகிறது.

குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவில் அரசு சார்பில் நடைபெற்ற சாரல் திருவிழாவில் தொடக்க நாளான 26ம் தேதி அன்று மாலை மங்கள இசையுடன் கோலாகலமாகக் ஆரம்பமானது.விழாவில் இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பி.செந்தூர்பாண்டியன் தலைமையில் மாண்புமிகு சுற்றுலா துறை அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் விழாவை தொடங்கி வைத்தார்.மாவட்ட ஆட்சியர் திரு மு.கருணாகரன் வரவேற்றார்.விழாவில் தென்காசி பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,சுற்றுலாத்துறை அதிகாரிகள்,அரசு அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள்,சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.அரசு நிகழ்ச்சிகள் தொடர்ந்து தினமும் மாலை கலை பண்பாட்டுதுறை,சுற்றுலா துறை ,தென்னக பண் பாட்டு மையம்,தமிழ் நாடு இயல் இசை நாடகம் மன்றம் சார்பில் மங்கள இசை, பரதநாட்டியம், இன்னிசை கச்சேரி,மெல்லிசை,மோஜீக் சோ,ஓயிலாட்டம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒரு வார காலம் நடத்தப்பட்டன.

ஒரு வார காலம் நடந்த சாரல் திருவிழாவில் முதல் மூன்று நாள் தோட்டக்கலை சார்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற ஊட்டி,கொடைக்கானலுக்கு ஈடான மலர்கள் கண்காட்சி,காய்கறிகள் பழக் கண் காட்சி பார்போரை பரவசப்படுத்தியது.சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் விதத்தில் நீச்சல் போட்டி,கோலப் போட்டி,கொலு கொலு குழந்தைகள் போட்டி,செல்லப் பிராணிகளுக்கான நாய்கள் வளர்ப்பு போட்டி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஓவியப் போட்டி,ஆணழகன் போட்டிகள் மற்றும் படகு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.