அகத்தியர் அருவி - அகத்தியர் அருவி என்பது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள அருவி ஆகும். இந்த அருவிக்குக் காரையார் மற்றும் சேர்வலாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வந்து கொண்டிருக்கிறது. சுமார் 25 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த அருவியில் ஆண்டு முழுமைக்கும் தண்ணீர் வருவதால், இந்த அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
குற்றாலத்தில் இருந்து 38 KM தொலைவில் உள்ளது. சுமார் 1 மணி நேர பயணத்தில் இவ்விடத்தை அடையலாம். வனத்துறையின் அனுமதியுடன் இந்த அருவிக்கு செல்ல வேண்டும். திறந்திருக்கும் நேரம்: காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

அகத்தியர் அருவி, பாபநாசம் நகருக்குத் தெற்கிலும் கீழ் பாபநாசத்துக்கு (தமிரபரணி ஆறு உற்பத்தியாகும் ஏரி]] வடக்கிலுமாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இவ்வருவி திருநெல்வேலியிலிருந்து 42 km (26 mi) தொலைவிலுள்ளது. இந்த அருவியில் வீழும் நீரானது பாபநாசம் நீர்மின் உற்பத்தி நிலையத்தை அடைந்து பின் அங்கிருந்து 142.15 ft (43.33 m) கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்பிடிப்புப் பகுதியைச் சென்றடைகிறது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அருகிலுள்ளதால் அருவியிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழையின் போது இவ்வருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. இருப்பினும் அதிகபட்ச அளவிலான நீர்வரத்து அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கிறது. அருவிக்கு அருகில் அகத்தியருக்கு சிறு கோயிலொன்று உள்ளது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தினரால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இங்கு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. பாபநாசநாதர் கோயிலுக்கு வருபவர்கள் இவ்வருவியையும் கண்டும் குளித்துவிட்டும் செல்கின்றனர். நவம்பர்-டிசம்பர் மாதங்களில் சபரிமலைக்குச் சென்றுவருபவர்களும் இவ்வருவிக்கும் குற்றால அருவிகளுக்கும் செல்கின்றனர். வடகிழக்குப் பருவமழையின்போது அருவியில் நீர்வீழ்ச்சியின் அளவும் வேகமும் அதிகமாக இருக்கும்போது பாதுகாப்பு காரணமாக மக்கள் இங்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்படுவதில்லை.
